உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா மாற்றத்தில் கவர்னர் தேவையற்ற அரசியல் செய்கிறார்- 'தராசு' ஷியாம்

Published On 2023-06-16 14:16 IST   |   Update On 2023-06-16 14:16:00 IST
  • மத்திய அரசின் அமைச்சர் துறைகளில் மாற்றம் ஏற்படும்போது அதற்கான காரணத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் கூற மாட்டார்.
  • ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு, கவர்னரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு கடமை இருக்கிறது.

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்தார். அதற்கான பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பினார்.

ஆனால் அந்த பரிந்துரையில் சில விளக்கங்களை கேட்டு அதை அரசுக்கு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

மத்திய அரசின் அமைச்சர் துறைகளில் மாற்றம் ஏற்படும்போது அதற்கான காரணத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் கூற மாட்டார். அதுபோல்தான் மாநிலங்களிலும் உள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. அப்படி வரும்போது 'சட்டத்தின் கீழ், சட்டத்தின் பார்வையில், சட்டத்தின் முன்' ஆகிய 3 கூறுகள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் கவர்னர் செய்திருப்பது அரசியல் சாசனத்தை மீறிய செயல். காரணம், அரசியல் சாசனத்தில் அப்படி எதுவுமே கூறவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு, கவர்னரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு கடமை இருக்கிறது. அதற்காக அவர் துறை மாற்றத்திற்கான தகவலை தெரிவிக்கிறார். எப்போதுமே அமைச்சர்களை பதவி பிரமாணம் செய்து வைக்கும்போது எந்தெந்த துறைக்கு இவர் என்று பதவி பிரமாணம் செய்து வைப்பது இல்லை.

அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். அதற்கு பிறகு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதை முதலமைச்சர் முடிவு செய்து கவர்னருக்கு தெரிவிப்பார்.

கவர்னரின் ஒப்புதல் என்பது இதில் தேவையே இல்லை. கவர்னர் இப்போது செய்திருப்பது தேவையற்ற அரசியல் என்பதுதான் எனது கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News