முகப்பேர் டெய்லர் கொலை வழக்கில் ஜாமினில் வந்து 4 ஆண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
- கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும், பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
- கொலை வழக்கு தொடர்பாக முகமது ரசூல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.
சென்னை முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பஞ்சமுக சிவன் கோவில் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்த பாபு என்பவர் 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை, கால்கள் என பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீசப்பட்டன.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாபுவின் கடைக்கு எதிரே கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும் (28) பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து முகமது ரசூலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் முகமது ரசூல் ஜாமினில் வெளியே வந்தார். கொலை வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் முகமது ரசூலை 4 ஆண்டுக்கு பிறகு கூடுவாஞ்சேரி அருகே கைது செய்தனர்.