சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, தங்குமிடம் நவீனமாகிறது
- நாட்டின் மிகவும் பரபரப்பான ரெயில்நிலையங்களில் ஒன்றான இங்கு, நவீன வசதிகள் மற்றும் சிறந்த சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம், ஆன்மீகம் மற்றும் மாறுதல் பயணங்களுக்காக தினமும் ஏராளமான பயணிகள் சென்ட்ரலுக்கு வருகின்றனர்.
சென்னை:
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் மற்றும் ரெயில் நிலைய வசதிகளை அதிகரிக்கும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'உள்ள ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்களை 'புதுப்பித்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல்' முறையின் கீழ் மேம்படுத்த தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் முடிவு செய்துள்ளது.
முன்பு ரெயில்வே நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்கள், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப பயணிகளுக்கு மிகச்சிறந்த மற்றும் இனிமையான தங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் நவீனப்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 9 குளிர்சாதன வசதியுள்ள படுக்கையறைகள் ஆண்களுக்கான தங்கும் கூடத்தில் உள்ள 23 குளிர் சாதன படுக்கைகள், பெண்களுக்கான தங்கும் கூடத்தில் உள்ள 5 படுக்கைகள் மற்றும் பயன்படுத்தப்படாத காலி இடங்கள் ஆகியவை முழுமையாக சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
நாட்டின் மிகவும் பரபரப்பான ரெயில்நிலையங்களில் ஒன்றான இங்கு, நவீன வசதிகள் மற்றும் சிறந்த சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தின் கான் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ளதால், பயணிகள் இங்கிருந்து நடைமேடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை எளிதாக அணுக முடியும். இது அவர்கள் தங்கும் நேரத்தில் கூடுதல் வசதியை அளிக்கும்.
வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம், ஆன்மீகம் மற்றும் மாறுதல் பயணங்களுக்காக தினமும் ஏராளமான பயணிகள் சென்ட்ரலுக்கு வருகின்றனர். மேம்படுத்தப்படவுள்ள இந்த வசதிகள், தரமான குறுகிய கால தங்கும் இடங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
இதற்காக, தகுதியும் அனுபவமும் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து மின்னணு ஏலம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஓய்வு அறைகள் மற்றும் தங்கும் கூடங்களை புதுப்பித்து, இயக்கி, பராமரிப்பதற்கான ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் ஆகும். செயல்பாடு திருப்திகரமாக இருப்பின், இது மேலும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்வதிலும், உள்கட்டமைப்பை தொழில் முறையில் பராமரிப்பதிலும் சென்னை கோட்டம் கொண்டுள்ள தொடர் அக்கறையை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.