தமிழ்நாடு செய்திகள்

அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல தேவை இல்லை- 'வாட்ஸ்-அப்' மூலம் 51 அரசு சேவைகளை மக்கள் எளிதில் பெறலாம்

Published On 2026-01-10 08:04 IST   |   Update On 2026-01-10 08:04:00 IST
  • இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது.
  • 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

சென்னை:

'வாட்ஸ்-அப்' மூலம் 51 அரசு சேவைகள் பெறும் விதமாக "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை மாநிலத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாடான உமாஜின்- 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தி உள்ளது. "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையின் மூலம், பொதுமக்கள் அரசு சேவைகளைத் தங்களது செல்போன் வழியாகவே எளிதாகப் பெற முடியும்.

இதன் மூலம் இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது. பொதுமக்கள் +9178452 52525 என்ற வாட்ஸ்-அப் எண்ணின் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "நம்ம அரசு'' திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அருண் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித்துறை சேவைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பக்தர்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம அரசு'' தளத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகளை படிப்படியாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News