ஆணி அடித்தால் ரூ.15 ஆயிரம்... மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12-ந்தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மரக்கிளை களை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.