பொங்கல் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாட வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி தி.மு.க. சார்பில் மாவட்டம் தோறும் "திராவிட பொங்கல் விழா" கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று காலை "திராவிட பொங்கல் விழா" மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று காலை வருகை தந்தனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த பெண்கள் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றனர். பொங்கல் விழா நடைபெறும் இடம் கரும்பு மற்றும் வாழைத் தோரணங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மிகப்பெரிய பொங்கல் பானை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பசு மற்றும் கன்று ஆகியவையும் நின்று கொண்டு இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்து முடித்ததும் அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கினார்கள்.
அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மொத்தம் 8,456 பேருக்கு பொங்கல் பொருட்கள், புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பெண்கள் அனைவருமே ஒரே மாதிரியான புடவை அணிந்து இருந்தனர்.
இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.