உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அருகே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என்று கூறி வாலிபரிடம் ரூ.2.85 லட்சம் பணம் பறிப்பு

Published On 2022-06-16 15:46 IST   |   Update On 2022-06-16 15:46:00 IST
சட்டவிரோதமாக பணம் புழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி ஞான பாக்கியராஜ் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் 34-ம் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் ஞான பாக்கியராஜ் (வயது 25). புதுக்கோட்டைைய பூர்வீகமாக கொண்ட தற்போது சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஷாஜகான். இவர் தமிழகம் முழுவதும் பலருக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.

அவரிடம் ஞான பாக்கியராஜ் வேலை பார்த்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தினமும் ஏராளமான பணத்தை ஞானபாக்கியராஜ் வசூல் செய்து வருவதை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர். அவரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக திட்டம் வகுத்தனர்.

இந்த நிலையில் ஞானபாக்கியராஜ் நேற்று வழக்கம் போல் தேவகோட்டையில் பணத்தை கொடுத்து விட்டு, மேலும் பலரிடம் பணம் வசூல் செய்தார். அந்த பணத்துடன் அவர் புதுக்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். திருமயத்தை அடுத்த கொசப்பட்டி கண்மாய் அருகே வந்தபோது 2 பேர் அவரை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் தங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, நீங்கள் சட்டவிரோதமாக பணம் புழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி ஞான பாக்கியராஜ் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து ஞான பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜிலென்ஸ் அதிகாரிகள் என கூறி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News