அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - அமைச்சர் மூர்த்தியிடம் கிராம கமிட்டியினர் கடும் வாக்குவாதம்
- இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அவனியாபுரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தாங்களே எடுத்து நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் அமைச்சரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மதுரைக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையிலே 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வருகை தர உள்ளனர். எப்போதும் போல் 3 ஜல்லிக்கட்டிலும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எந்தவித பாகுபாடும் இன்றி இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்றார்.