கன்னியாகுமரியில் சூறாவளி காற்றுடன் பயங்கர கடல் சீற்றம் - படகு போக்குவரத்து ரத்து
- நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன.
- கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் பயங்கர கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. சில நேரங்களில் எழுந்து வந்து ராட்சத அலைகள் கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
கரையை நோக்கி வந்த ராட்சத அலைகளை கண்டு கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அவ்வப்போது நிகழ்ந்த கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். சில நேரங்களில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.
இந்த கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு "திடீர்"என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு துறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகிய வற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.