திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு - நாளை தீர்ப்பு
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விசாரித்தனர். இதில் மலை உச்சியில் உள்ள தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், கோவில் தரப்பு என பல்வேறு தரப்பினரும் தங்களது தரப்பு கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். முடிவில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்க மூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் சொல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று தர்கா நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தர்கா நிர்வாகம் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும். அதன் பின்பு உரிய முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர்.
இதன் மூலம் நாளை நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் அசைவ உணவு பரிமாறும் கந்தூரி விழா நடத்த கூடாது என்று நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.