உழவர்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கையா? - அன்புமணி
- கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
- ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 4 லட்சம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உழவர்களை ஏமாற்றுவதையே தி.மு.க. அரசு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கக்கூடாது. உழவர் பெருமக்கள் உழவர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.