காதல் த.வெ.க. மீதுதான்... கல்யாணம் செய்துகொண்டது தி.மு.க.வை - நாஞ்சில் சம்பத்
- த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.
- மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியல் தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள். தொலைந்தார்கள்.
அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வரும் என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே நெஞ்சில் இன்று உதயமாகி உள்ளது.
விஜயின் அதிர்வுகள் இன்றைக்கு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைக்கு த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கே அந்த ஆசை உள்ளது.
நான் ரெயிலில் பயணித்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். நான் அவரிடம் என்ன த.வெ.க.வுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டேன்.
அவர் சொன்னார். எங்களுக்கு த.வெ.க. மீது தான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது தி.மு.க.வை என்று வருத்தத்துடன் சொன்னார்.
எல்லா கட்சிகளும் த.வெ.க. எனும் நந்தவனத்திற்கு வருவதற்கு நாள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
மிகப்பெரிய ராஜதந்திரி தளபதி விஜய். திருவண்ணாமலையில் 1,35,000 இளைஞர்களின் நிர்வாகிகளின் வடக்கு மண்டல மாநாடு நடத்துகின்ற அன்று, அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையனை த.வெ.க.வில் இணைத்ததன் மூலம் தி.மு.க. இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.
டிச.5-ந்தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் நடத்துவதாக அறிவித்தார்கள்.
அன்றைக்கு தான் த.வெ.க. தலைவர் என்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அன்றைக்கு நான் இணைந்து செய்தியானதே தவிர அந்த பேரணி செய்தியை எந்த தொலைக்காட்சியும் வெளிப்படுத்தவில்லை.
ஆகவே, எதிரியை எங்கே, எப்போது அடிக்க வேண்டும் என்ற லாவகம் தெரிந்த ஒரே தலைவர் இந்திய அரசியலில் எங்கள் த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.