உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட செல்வராஜ்

காரை ஏற்றி தீர்த்து கட்டிய தந்தை, மகன் கைது

Published On 2023-10-31 09:52 GMT   |   Update On 2023-10-31 09:52 GMT
  • ருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
  • வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை யாளர் செல்வராஜ் (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (43). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.

இந்நிலையில் முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிலத்தை முருகன் பணத்தை ெகாடுத்து திரும்ப பெறாத நிலையில் கடந்த 26-ந் தேதியன்று அந்த நிலத்தை செல்வராஜ் தனது பெயருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த முருகன் செல்வராஜிடம் சென்று நிலத்தை தனக்கு திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்த நிலையில் செல்வராஜுக்கும் முருகனுக்கும் முன்பகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்வராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (69) என்பவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.

அவர்களுக்கு தெரியாமல் முருகன் தனது காரில் செல்வராஜை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முருகன் தனது காரை செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி செல்வராஜூம், கந்தசாமியும் கீழே விழுந்தனர். அப்போது முருகன் தான் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜ், கந்தசாமி ஆகியோரை சரிமாரியாக வெட்டினார். முருகனின் 16 வயது மகனும் அவர்களை கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும், கந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட முருகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான முருகனின் மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

Similar News