தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தான் சட்டமன்றத்திற்குள் வரமுடியும் என்பது காங்கிரஸுக்கு தெரியும்- அமைச்சர் ரகுபதி
- சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது.
- பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறைந்த கட்சி தான் உள்ளது. அவர்கள் கூட்டணியை ஆரம்பித்து பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதனால் அ.தி.மு.க. கூட்டணியுடன் தி.மு.க. கூட்டணியை ஒப்பிடக்கூடாது. நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் சமூகமாகத்தான் பேசுவோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணியை சரியான பாதையில் கொண்டு செல்வார்.
த.வெ.க.வுடன் காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கிளப்பி விடுகின்ற விஷயம். எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி, இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
விஜய்யும் யாரும் செல்லாததால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை விஜய் புரிந்திருக்கலாம். அவ்வளவு தான், ஆள் இல்லாத வீட்டில் என்ன வேணாலும் கொண்டாடலாம். த.வெ.க. ஆளில்லா வீடு. சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது. அதன் மூலமாக நாங்கள் வாக்குகள் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யக்கூடிய சூழ்நிலை சில தொகுதியில் உருவாகி இருக்கிறது.
பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம். எங்களது கனவு உண்மையான கனவு. எங்களது நினைவும் உண்மையான நினைவு. 200 நிச்சயம், அது தமிழ்நாடு சரித்திரத்தின் வரலாறாக இருக்கும். நாங்கள் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கி விட்டோம். இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத வகையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வீடு வீடாக சென்று மகளிர் பரப்புரையை மேற்கொண்டுள்ள ஒரே இயக்கம் தி.மு.க.தான். ஒவ்வொரு வாக்காளரையும் ஒரு முறையல்ல, இரு முறை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். 118 இடங்களுக்கு மேலே வெற்றி பெற்றால் தனி பெரும்பான்மை தான். தி.மு.க. 120 இடங்களில் வெற்றி பெற்று விடும். இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றார்.