தமிழ்நாடு செய்திகள்

துபாயில் சிக்கி தவித்த 217 பயணிகள் சென்னை திரும்பினர்

Published On 2026-03-04 07:30 IST   |   Update On 2026-03-04 07:30:00 IST
  • பிற நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
  • கடந்த 3 நாட்களுக்கு பின் ஒரு சில விமானங்களை இயக்குவதாக துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது.

ஆலந்தூர்:

மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வருவதால் பல நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டதால் துபாய், பக்ரைன், அபுதாபி, சார்ஜா, கத்தார். குவைத், மஸ்கட் போன்ற நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் நேரடி விமான சேவை, துபாய் விமான நிலையத்தில் இருந்து இருப்பதல் எப்போதும் அங்கு பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். அங்கிருந்து பிற நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு பின் ஒரு சில விமானங்களை இயக்குவதாக துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துபாயில் சிக்கித்தவித்த குழந்தைகள், பெண்கள் உள்பட 217 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 2.18 மணிக்கு, அந்த விமானம் சென்னை விமான நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை உறவினர்கள் கட்டி தழுவி கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

துபாயில் இருந்து வந்த பயணிகள் அளித்த பேட்டி வருமாறு:-

துபாயில் கணவருடன் தங்கி இருந்த பூந்தமல்லியை சேர்ந்த ஜெயந்தி கூறுகையில், துபாயில் இருந்து எப்போது சொந்த ஊருக்கு வருவோம் என்ற எண்ணத்திலேயே இருந்தோம். ஒரு வழியாக சென்னைக்கு வந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த விமானத்தில் வந்து சேருவார் என ஆவலோடு காத்து இருக்கிறேன். போர் பதற்றத்தால் துபாயில் தூங்க முடியாமல் தவித்தோம்' என கூறினார்.

துபாய்க்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய கோயம்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், 'துபாயிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருந்தோம். கடந்த சனிக்கிழமை சென்னை வர இருந்த நிலையில் போர் காரணமாக ஓட்டலிலேயே முடங்கினோம். பயங்கர சத்தத்தால் பீதியாக இருந்தது. சுற்றுலா வந்து மாட்டிக்கொண்டமே என நினைத் தோம். ஆனால் விமானத்தில் எங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்' என கூறினார்.

சைதாப்பேட்டையை சேர்ந்த தேவக்குமார் கூறுகையில், 'ஐரோப்பாவில் வேலை செய்கிறேன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வர கடந்த 28-ந்தேதி துபாய் வந்தேன். விமான சேவை நிறுத்தப்பட்டதால் அருகில் உள்ள ஓட்டல்களில் எங்களை தங்க வைத்தனர். யாரும் வெளியே வர கூடாது என அறிவுறுத்தினர். ஆனால் வெடிகுண்டு சத்தம் கேட்டு கொண்டே இருந்தது' என கூறினார்.

மாதவரம் பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில், 'சவூதியில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தேன். விடுமுறைக்காக சவூதியில் இருந்து துபாய் வந்தேன். போர் காரணமாக விமான சேவையை ரத்து செய்து விட்டனர். துபாய் விமான நிலையத்தில் இருந்த 20 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் தங்க ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. போர் தொடர்பான செய்திகளை பார்க்கும் போது பயமாக இருந்தது. ஓட்டல் அருகே சைரன் அடித்த போது எல்லாரும் அழ ஆரம்பித்து விட்டனர். ஓட்டல் ஊழியர்கள் ஆறுதல் கூறினார்கள்' என கூறினார்.

Tags:    

Similar News