கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த கோவில் காளை: 6 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
- சுமார் 6 மணி நேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கோவில் காளை எவ்வித காயமுமின்றி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
- காளையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராம மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் கிராமத்தில், குமார் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அவரது வீட்டின் அருகே ஆழமான கழிவுநீர் தொட்டி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த வழியாக வந்த இரண்டு கோவில் காளைகள் திடீரென ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டையிட்டன.
இந்த மோதலின் போது, எதிர்பாராத விதமாக ஒரு கோவில் காளை நிலைதடுமாறி அருகிலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. காளையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கினர். காளை கடும் ஆக்ரோஷத்துடன் இருந்ததால், அதனை நெருங்குவதில் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக ஜேசிபி (JCB) இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்புப் பணி தொடர்ந்தது. சுமார் 6 மணி நேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கோவில் காளை எவ்வித காயமுமின்றி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. காளையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராம மக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.