சென்னை தம்பதியிடம் 1.4 டன் மிளகு வாங்கி ரூ.23.10 லட்சம் மோசடி
- ஜெயஸ்ரீ 1 டன் மிளகு வாங்கி அனுப்பினால், நாங்கள் பணம் கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.
- வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை,
சென்னை சமயபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயபாண்டியன். இவரது மனைவி புவனேஸ்வரி(44). இவர் சென்னையில் தனது கணவருடன் ஆன்லைன் டிரேடிங் கம்பனி நடத்தி வருகிறார். இவர் வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு கோவை கரும்புகடை, பத்திமாநகரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கவுதமி என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான், இடையர்வீதியில் மீரான், காளிராஜன், அஜ்மல்கான், தாவுத் ஆகியோருடன் சேர்ந்து, டிரேடிங் கம்பெனி நடத்தி வருவதாக கூறினார்.
மேலும் நீங்கள் 1 டன் மிளகு வாங்கி அனுப்பினால், நாங்கள் பணம் கொடுத்து விடுவதாக தெரிவித்தனர்.
அதன்படி நானும், கேரளாவில் 1.4 டன் மிளகு வாங்கி தனியார் பார்சல் மூலமாக கடந்த ஆண்டு செப்டம் மாதம் அனுப்பினேன்.
இது தொடர்பாக அவர்களிடம் தெரிவித்த போது, சில நாட்களில் எடுத்து விட்டு ரூ.23 லட்சத்து 10 ஆயிரத்தை அனுப்பவுதாக கூறினர். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுதமி, மீரான், தாவுத், அஜ்மல் கான், காளிராஜன் ஆகிய 5 பேர் இதுபோன்று கோவை, சென்னை, ஈரோடு பகுதிகளில் மோசடி செய்ததும், இது தொடர்பாக அங்கு அவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அஜ்மல்கான், காளிராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் கவுதமி, தாவுத், மீரான் ஆகியோரை தேடி வருகின்றனர்.