கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி
- இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர்.
- சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சாத்தூர்சாமி (வயது 63). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.
இவருக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையம் நாராயணா நகரை சேர்ந்த விஜயலட்சுமி (40). இவரது கணவர் சுதாகரன் (43) ஆகியோருக்கும் அறிமுகம் கிடைத்தது. சுதாகரனும், அவர் மனைவியும் ஆர்.எஸ்.புரம் சி.வி.ராமன் ரோட்டில் துணிவியாபாரம் செய்வதாக கூறினர்.
மேலும் அங்கே இருக்கும் தங்களது இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர். பின்னர் வேறு ஒரு அவசர தேவை என கூறி ரூ.15 லட்சம் பெற்றனர். அதன்பின் பாலக்காடு கோட்டத்துறை பகுதியில் தங்களது பெயரில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கினார்கள்.
இப்படியே இவர்கள் மொத்தமாக ரூ.22½ லட்சம் பெற்றனர். ஆனால் அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்க வில்லை.
இது குறித்து சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ராணுவ வீரரிடம் மோசடி செய்த விஜயலட்சுமி, சுதாகரன் ஆகியோரை கைது செய்தனர். நில விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட சதீஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.