வீட்டு மனைப்பட்டா கேட்டு நூதன போராட்டம்
- வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த பொதுமக்கள்
- வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடத்திலும் பட்டா வழங்க கோரிக்கை
கோவை,
அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையினர் புஷ்பானந்தம் தலைமையில் பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை தடாகம் ரோட்டில் உள்ள வேலாண்டிபாளையம், கே.என்.ஜி.புதூர், துடியலூர், பன்னிமடை, கணுவாய், சின்ன தடாகம், ஆனைகட்டி, சிவாஜி காலனி போன்ற பகுதியை சேர்ந்த பொது மக்கள் 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தோம். ஆனால் 10 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது.
மீதமுள்ளவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும், தற்போது வரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவை வடக்கு வட்டம் 24 . வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடங்கள் உள்ளன. எனவே இடங்களை தேர்வு செய்து மீதமுள்ளவர்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.