பாலமேடு ஜல்லிக்கட்டு உதயநிதிக்காக நடத்தப்பட்டதா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
- பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
- 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மனிதனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் கோட்டைக்கு போவார் அப்போது தமிழக மக்களுக்கு நிச்சயமாக வழி பிறக்கும்.
உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டி மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உதயநிதிக்காக ஜல்லிக்கட்டா? மு.க.ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகாலையில் இருந்து மாடுபிடி வீரர்களும், காளைகளும் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து தொடங்கப்படவில்லை. பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது. உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள். தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறி சென்று விட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனநாயகம் மலர இந்த தைத்திருநாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும் என்று கூறினார்.