காஞ்சிபுரம் அருகே 5 டன் கரும்பில் உருவான திருத்தேர்- 21 அடி உயரத்தில் அசத்தல்
- 5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார்.
- தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
பொங்கல் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த குண்டுக்குளம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான செந்தில்குமார் என்பவர் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளைகள் என பல்வேறு வகையில் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அவர் விவசாயிகள் பயிரிட்டு வரும் செங்கரும்பினை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக 5 டன் செங்கரும்பினால் ஆன பிரம்மாண்டமான திருத்தேரை தயார் செய்து உள்ளார்.
5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார். தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது, உழவர்களின் உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீட்டை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக கோவில் தேர் அமைத்தது மட்டுமல்லாமல் விவசாயிகள் பயிரிடும் செங்கரும்பை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்து உள்ளார். இந்த செங்கரும்பு திருத்தேர் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை 10 நாட்கள் அப்பகுதி மக்கள் நேரில் பார்வையிட பார்வைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது.