தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- தொடர் விடுமுறையால் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2026-01-16 15:07 IST   |   Update On 2026-01-16 15:07:00 IST
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
  • லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதுமே அணிவகுப்பதை காண முடியும். துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் செங்குன்றம், புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் சென்று வரும்.

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறைவிடப்பட்டுள்ளதால் லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வடசென்னை பகுதிகளும் வாகனப் போக்குவரத்து இன்றியே காணப்படுகிறது.

நாளை காணும் பொங்கலுக்கு இன்று இருப்பதை விட வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News