எலும்புக்கூடு கிடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
#Kodaikanal ஆற்றில் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு
- கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்கனவே பல உடல்கள் கேட்பாரற்று கண்டுபிடிக்கப்பட்டது.
- மலைப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரில் முக்கிய குடியிருப்பு பகுதியில் ஒன்றான கங்கா காம்பவுண்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு தங்கும் விடுதி, தனியார் பள்ளி விடுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதையொட்டி நட்சத்திர ஏரியில் இருந்து வெளியேறும் ஆற்றுநீர் செல்கிறது. இந்த ஆற்றங்கரையோரம் கால்சட்டை மட்டும் அணிந்த நிலையில் எலும்புக்கூடு கரை ஒதுங்கியது.
இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று போலீசார் எலும்புக்கூடை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு உடலை ஆற்றில் வீசிச் சென்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்கனவே பல உடல்கள் கேட்பாரற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களில் சம்மந்தப்பட்ட நபர் யார் என்பதை கண்டு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மலைப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் இறந்த நபர்கள் யார்? எந்த ஊர்? என தெரிவதில்லை.
மேலும் இதுபோல் அடையாளம் தெரியாத உடல்கள், எலும்புக்கூடுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினாலும், குற்றவாளிகள் சிக்குவதில்லை. இந்த நிலையில் ஆற்றங்கரையோரம் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.