திருப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
- செவிலியர்கள் அளித்த புகாரின் பேரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தது.
- அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து மருந்து மாத்திரைகள் பெற்று செல்கிறார்கள்.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், மருந்து வழங்கும் அறையில் கட்டிடங்கள் வலுவிழந்து காணப்பட்டது.
இதுகுறித்து செவிலியர்கள் அளித்த புகாரின் பேரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்காக அந்த அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டிடத்தின் மேற்கூரை இரவு இடிந்து கீழே விழுந்தது. நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்த காரணத்தால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஆட்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.