காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சரால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?- #TTVDhinakaran
- தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
- குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது - தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?
சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறைக்கென தலைவர் (DGP) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.