தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. பகுதி செயலாளர் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2026-01-16 15:08 IST   |   Update On 2026-01-16 15:08:00 IST
  • அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர்.
  • அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

சைதாப்பேட்டை:

சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் சைதை சுகுமார் (வயது 47). இவரது அலுவலகம் சைதாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது.

இந்த நிலையில் நாளை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். பின்னர் இரவு கட்சி அலுவலகத்திற்கு தூங்க போவதாக கூறி அவருடன் இருந்த நண்பர்களிடம் கூறி சென்றார்.

இதனால் நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். இன்று அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.

அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடனே இது பற்றி குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுகுமார் உடலை கைப்பற்றி சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இறந்துபோன சுகுமாரின் செல்போனை பறிமுதல் செய்து கடைசியாக யார்? யாரிடம் பேசிள்ளார் என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அ.தி.மு.க. பகுதி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Tags:    

Similar News