ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட மாணவர்களை முதலமைச்சர் பாராட்டியது தவறான முன்னுதாரணம்| Ramadoss
- ரீல்ஸ், short-video போன்றவைகளால் சிறுவர்களின் மனநலத்துக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற காரணத்தை முன் வைக்கிறது.
- நன்றாக கல்வி பயின்று மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் அது தவறில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகில் ரீல்ஸ் மற்றும் செல்பி எடுத்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ரீல்ஸ், செல்பி குறித்த ஆய்வின் படி 2014 - 2025 காலகட்டத்தில் நடைபெற்ற 271 நிகழ்வுகளில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவிலான இறப்பு விகிதத்தில் இந்தியாவில் மட்டும் 42 சதவீதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியாக "reels deaths" என்ற அதிகாரப்பூர்வ தரவு இல்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் ரெயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, பைக் ஸ்டண்ட் வீடியோ எடுக்கும் போது விபத்தில் உயிரிழப்பு, அணை மற்றும் கடல் அருகே ரீல்ஸ் எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழப்பு என்ற செய்திகள் நம்மை பாதித்ததை மறக்க முடியாது. ரீல்ஸ், செல்பி மோகத்தால் உயிரிழந்தவர்களில் 10-19 வயதிற்குட்பட்டவர்கள் 36 சதவீதமும், 20-29 வயதுவரை 45 சதவீதமும், 30-39 வயதுவரை 13 சதவீதமும், 40 வயதிற்கு மேல் 6 சதவீதம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் 80% மரணங்கள் 30 வயதுக்குள் உள்ளவர்களே. இவர்களில் ஆண்கள் - சுமார் 70-75 சதவீதமும், பெண்கள் - சுமார் 25-30 சதவீதமுமாகும். இவர்களால் எடுக்கப்படும் ரீல்ஸ்கள் மற்றும் செல்பிகள் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது.
இளைஞர்களிடையே வேகமாக பரவிவரும் இம்மோகத்தை கட்டுப்படுத்த கர்நாடகா 2026-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரீல்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆந்திரபிரதேசம் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்யும் திட்டம் பற்றி பரிசீலித்து வருகிறது. கோவா 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கலாமா என நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது. பல சமூகவலைதளங்கள் 13 வயதிற்கு கீழே உள்ளவர்கள் கணக்கு துவங்க அனுமதி இல்லை என கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ரீல்ஸ், short-video போன்றவைகளால் சிறுவர்களின் மனநலத்துக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற காரணத்தை முன் வைக்கிறது. இந்தியாவும் இது குறித்து ஆலோசித்துவருகிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஜீவா, 5-ம் வகுப்பு படிக்கும் தேவா ஆகியோர் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பதிவிட்டனர். அவர்களை சென்னைக்கு வரவழைத்த முதலமைச்சர் "உங்களின் ரீல்ஸ் வீடியோ உருவாக்கம் நன்றாக உள்ளது. அதற்காக என் வாழ்த்துகள்" என உற்சாகப்படுத்தியுள்ளார். நன்றாக கல்வி பயின்று மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் அது தவறில்லை.
அதே நேரம் ரீல்ஸ் எடுத்த பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும்போது, அடுத்து அவர்கள் வெவ்வேறு கோணங்களில் ரீல்ஸ் எடுக்கவே மனம் விரும்பும், பாராட்டுக்கு ஏங்கும். இதை முன்னுதாரணமாக கொண்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து கல்வியின் முக்கியத்தை சொல்லும்வகையில் மலைமீதும், ரெயில்மீதும், கடலிலும், நீர்வீழ்ச்சியிலும், என பல இடங்களில், வெவ்வேறு கோணங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணராமல் ரீல்ஸை உருவாக்க மாணவர்கள் யோசிப்பார்களே என்பதை ஏன் முதலைச்சர் யோசிக்காமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை. முதலமைச்சரின் இச்செயலை நான் தவறான முன்னுதாரணமாகவே பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.