தமிழ்நாடு செய்திகள்

பெண் கொடுக்க மறுப்பு: கடத்த முயன்ற கும்பல்- தடுக்கப்போன தாயை வெட்டிக் கொலை செய்த கொடூரம்

Published On 2026-03-15 12:06 IST   |   Update On 2026-03-15 12:06:00 IST
  • சகோதரி கணவனின் முதல் மனைவியின் மகளை பெண் கேட்டுள்ளார் 34 வயது நபர்.
  • பெண்ணின் தாய் தொடர்ந்து மறுத்து வந்ததால், கடத்திச் சென்று திருமணம் செய்த முயற்சி கொலையில் முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவர், விவசாய கூலி வேலைக்கும் சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி காளியம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு சுவேதா (வயது 20), சுபதர்ஷினி (18) ஆகிய இரண்டு மகள்களும், பாலமுருகன் (12) என்ற மகனும் உள்ளனர்.

இதற்கிடையே சொந்த ஊரில் விவசாயம் குறைந்ததால் செங்கல்பட்டுக்கு சுரேஷ் கூலி வேலைக்கு சென்றார். அங்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நெடுவாசல் பகுதியிலேயே வெவ்வேறு வீடுகளில் சுரேஷ் காளியம்மாள், விஜயலட்சுமி ஆகியோருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுரேசின் இரண்டாவது மனைவியான விஜயலட்சுமியின் தம்பி செங்கல்பட்டை சேர்ந்த விவின் (34) என்பவர் சுரேசின் முதல் மனைவியான காளியம்மாளின் மகள் சுபதர்ஷினியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்காக அவர் முறைப்படி பெண் கேட்டு சென்றுள்ளார்.

ஆனால் காளியம்மாள் மற்றும் அவரது மகள் சுபதர்ஷினி இருவருக்கும் இதில் விருப்பமில்லாமல் பெண் கொடுக்க மறுத்துள்ளனர். பெண் கொடுக்குமாறு சுரேஷ் தனது முதல் மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் இரண்டாவது மனைவியான விஜயலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் விவின் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களுடன் சுபதர்ஷினியை கடத்திச் செல்ல நெடுவாசலுக்கு வந்துள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுபதர்ஷினியின் வாயை துணியால் பொத்தியுள்ளனர். இதில் தூக்கம் கலைந்த அவர் அச்சத்தில் கூச்சல் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவரது தாய் காளியம்மாள் எப்படியாவது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவின் மற்றும் இரண்டு பேர் சேர்ந்த கும்பல் காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காளியம்மாள் ஒருசில விநாடிகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த தப்பிச்சென்றனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடி கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். கிராமப் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News