உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே காட்டு யானை தாக்கி வடமாநில வாலிபர் படுகாயம்

Published On 2023-07-31 14:48 IST   |   Update On 2023-07-31 14:48:00 IST
  • தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

வடவள்ளி,

கோவை மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி.காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழக பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகின்றன.

கடந்த வாரம் 24-ந் தேதி அதிகாலை நவாவூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பருப்பு மற்றும் அரிசியை ருசித்து சென்றன.

இதேபோல் இந்த பகுதியில் காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக ஒற்றை யானை ஒன்றும் நடமாடி வருகிறது.

இந்த யானை அண்மையில் பாரதியார் பல்லைக்கழக வளாகத்தில் உள்ள இருப்பு அறைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பருப்பை சாப்பிட்டு சென்றது.

தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது நண்பர்களுடன் கல்வீரம்பாளையத்தில் தங்கி கட்டி வேலைக்கு சென்று வருகிறார்.

இன்று அதிகாலை மனோஜ்குமார், தனது நண்பர்கள் 2 பேருடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு புதர்மறைவில் காட்டு யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் காட்டு யானை விடாமல் அவர்களை துரத்தி வந்தது. இதில் 2 பேர் ஓடி விட்டனர். மனோஜ்குமார் மட்டும் ஓட முடியாமல் கீழே விழுந்தார்.

இதையடுத்து யானை மனோஜ்குமாரை தந்தத்தால் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்று விட்டது.

இதற்கிடையே இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News