உள்ளூர் செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் விற்பனை நடைபெறாததால் தக்காளி கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம்

Published On 2023-07-26 07:31 GMT   |   Update On 2023-07-26 07:31 GMT
  • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
  • கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் உழவர் சந்தைக்கு கோனூர், திண்டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

கிலோ ரூ.130

உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்காயம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர்.

இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90-க்கு விற்கப்பட்டன.

விற்பனை நிறுத்தம்

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்நது உயர்ந்து வந்ததால், விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி உழவர் சந்தையில் விற்கப்பட்டது. தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News