சேலம் ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை: பொதுமக்களின் இயல்பு வாாழ்க்கை பாதிப்பு
- ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
- வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம்:
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பனி மூட்டம் நிலவியதுடன் சாரல் மழையும் பெய்தது.
குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
ஏற்காட்டில் நேற்று பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் சாரல் மழையாக நீடித்த நிலையில் இன்று காலையும் சாரல் மழையாக பெய்தது. ஏற்காடு பஸ் நிலையம் , ரவுண்டானா, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதலே பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.
இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில் பனி பொழிவும் அதிக அளவில் உள்ளதால் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
ஏற்காட்டில் நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக அதிக குளிர் வாட்டி வதைக்கிறது. மேலும் ஏற்காட்டில் பனி பொழிவு அதிக அளவில் உள்ளதால் அருகில் நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.
மேலும் மலைப்பாதை யில் நிலவிவரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக வாகன ங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்த படி சென்று வருகின்றன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காபி தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் உள்ளூர் வாசிகளின் வருமானமும் பாதிக்கப்ப ட்டுள்ளது. குறிப்பாக காப்பி தோட்ட பணிகளும் முடங்கி உள்ளது. தொடர் மழை மற்றும் பனியால் மிளகு கொடிகள் அழுகும் நிலையில் உள்ளது.
சேலம் மாநகரில் நேற்று மாலை பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சற்று தூரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத நிலை இருந்தது. இதனால் 4 வழிச்சாலைகளில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களும் சென்றன. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததுடன் கடும் குளிர் நிலவியது.
குறிப்பாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கிய படி சென்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியவர்கள் சிறு தூரலுடன் கடும் குளிர் நிலவியதால் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் மாநகரில் இன்று காலையும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை பனிப்பொழிவு இருந்தது. திருச்செங்கோடு, கொல்லிமலை மலை பகுதியில் பனிப்பொழிவுன் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாரல் மழையும் பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, திம்பம் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த வழியாக வந்த செல்லும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றது.
நாள் முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் புல்வெளிகளில் பனிபடர்ந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தப்படி வெளியே வந்து செல்கின்றனர்.
பனிப்பொழிவு அதிக அளவில் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இதே போல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று காலையும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.
திருப்பூர் மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவியது. இன்றும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றது.
இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.