கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் விசில் ஊதி ஆர்ப்பாட்டம்
- 3 பேர் கரடி குரங்கு பொம்மை மற்றும் பொம்மை வேடம் அணிந்து மனு அளிக்க வந்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
கோவை,
தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் துறை அலுவலகங்கள், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் சைகை மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் காது கேளாத, வாய்ப்பேசாத மாற்றுத்திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், அரசு பணிகளில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் தங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ. 5000 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விசில் ஊதி, கோரிக்கை பதாகைகளை ஏந்தி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த 3 பேர் கரடி குரங்கு பொம்மை மற்றும் பொம்மை வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புலியகுளம் மாரியம்மன் மற்றும் முந்தி விநாயகர் கோவிலில் கடை நிலை ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர், தக்கார் மற்றும் இணை ஆணையர் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே கலெக்டரிடம் இவர்களின் மெத்தன போக்கை கண்டிக்கும் விதமாக செயல் அலுவலர் தக்கார் மற்றும் இணை ஆணையாளர் ஆகியோர் பெயரில் குரங்கு கரடி மற்றும் பொம்மை வேடத்தில் மனு அளிக்க வந்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.