உள்ளூர் செய்திகள்

சிமெண்ட் ஓடு விழுந்து வடமாநில பெண் குழந்தை பலி

Published On 2022-08-26 15:47 IST   |   Update On 2022-08-26 15:47:00 IST
  • தறிப்பட்டறையின் சிமெண்ட் ஓடு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆயிஷா தலை மீது விழுந்தது.
  • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (35).இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு 4 வயதில் ஆயிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு செல்லும் போது தங்களது 4 வயது பெண் குழந்தையையும் அழைத்து செல்வது வழக்கம்.

நேற்று இரவும் அப்துல் ரகுமான், ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தை ஆயிஷாவையும் உடன் அழைத்து சென்றனர். தறிப்பட்டறையில் ஒரு பகுதியில் குழந்தையை தூங்க வைத்துள்ளார்கள். நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது தறிப்பட்டறை அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து கல், தறிப்பட்டறையின் சிமெண்ட் ஓட்டில் மேல் விழுந்தது. அப்போது அந்த சிமெண்ட் ஓடு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆயிஷா தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை உயிருக்கு போராடியது.

உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News