அண்ணாமலை தனக்குதானே அடித்து கொண்டது தி.மு.க. ஆட்சிக்கான சவுக்கடி -நமச்சிவாயம்
- முதலமைச்சர் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
- தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததுடன் அறவழியில் தன்னுடையபோராட்டத்தை தொடங்கி தனக்குத் தானே அடித்துக் கொண்ட சாட்டையடி, தி.மு.க. ஆட்சிக்கான சவுக்கடி.
சென்னையின் பிரதான பகுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில், பொறுப்பாக பதில் அளித்து இருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் தி.மு.க. பிரமுகர்களெல்லாம், இது குறித்து கருத்தும் விளக்கமும் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கின்றனர். இதன் வாயிலாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சி களும் மக்கள் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலை மாணவி பிரச்சினையில், தி.மு.க. அரசு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க உதவியாக இருக்கக்கூடாது.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு தான். நிர்வாக செலவுகள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தல், வரி வருவாயை அதிகரித்தல் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.
பா.ம.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வர். இதில் தலையிடுவது அர்த்தமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.