மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: திருமண நாளில் கணவன்-மனைவி பலி
- ஈஸ்வரன் - சங்கீதா தம்பதிக்கு நேற்று திருமண நாள்.
- காயம் அடைந்த தஸ்வந்த் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (29). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு கிஷோர் (3½), தஸ்வந்த் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கிஷோர் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
ஈஸ்வரன் - சங்கீதா தம்பதிக்கு நேற்று திருமண நாள் ஆகும். இதையொட்டி காலை கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, தஸ்வந்த் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்றனர். கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த தஸ்வந்த் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பஸ் டிரைவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறி இதற்கு ஒரு முடிவு தெரியாமல் பிணத்தை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.