கருமத்தம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களில் பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு
- பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு, கருமத்தம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
- குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
கருமத்தம்பட்டி,
கோவை கணியூர் கரவளி மாதப்பூர் ரோடு குருலட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெனிமா (வயது23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது ஜெனிமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரது குடும்பத்தினர் அவரை கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கடந்த 21-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் கழித்து, ஜெனிமா தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு, கருமத்தம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர்.ஏற்கனவே ஒருமுறை ஜெனிமாவுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும், தற்போது மீண்டும் பெண் குழந்தை பிறந்து, பிறந்த 8 நாட்களிலேயே இறந்து விட்டது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.