தமிழ்நாடு செய்திகள்

ஆட்டம்-பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்ற சுற்றுலாப் பயணிகள்: வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Published On 2026-01-01 11:04 IST   |   Update On 2026-01-01 11:04:00 IST
  • தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
  • குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.

ஊட்டி:

உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற்சாகம், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் குளுகுளு காலநிலை, பசுமை சூழ்ந்த மலைகள், மிதமான பனி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தன.

ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு டி.ஜே. இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான வானவேடிக்கைகள், சிறப்பு விருந்துகள், பாரம்பரிய நவீன கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் களைகட்டின. சுற்றுலாப் பயணிகள் இசை, ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தனியார் ஓட்டல்கள் மற்றும் அரசின் 'ஓட்டல் தமிழ்நாடு' அரங்கிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக்கு முன்பாகவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு, அறைகள் நிரம்பி வழிந்தன.

ஊட்டியில் தங்குமிடம் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி, அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து புத்தாண்டை கொண்டாடி தீர்த்தனர்.

நீலகிரிக்கு வரும் சிறப்பு மலை ரெயில்களிலும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர். இதன்காரணமாக குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குள்ள வியாபார கடைகள், உணவகங்கள் மற்றும் நினைவுப்பரிசு கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. இதனால் அங்கு சுற்றுலாவை சார்ந்து செயல்படும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மொத்தத்தில் குளுகுளு காலநிலை, இயற்கை அழகு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான கொண்டாட்டங்களுடன் ஊட்டியில் அரங்கேறிய புத்தாண்டு விழா மறக்க முடியாத அனுபவமாக மாறி உள்ளது.

குன்னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக்,காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் புத்தாண்டையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதன்காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் நகர-கிராமப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் குன்னூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News