உள்ளூர் செய்திகள்

கோவை அரசு பள்ளியில் பாலியல் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2023-07-21 14:26 IST   |   Update On 2023-07-21 14:26:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
  • கடந்த கல்வியாண்டில் 1,300 பள்ளிகளில் படிக்கும் 2.11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கவுண்டம்பாளையம்,

கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' என்ற திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 'புராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0' என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறார்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல், தவறான தொடுதல், அதனால் பாதிக்கப்பட்டால் யாரிடம் தெரிவிக்க வேண்டும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளும் முறை உள்ளிட்டவை குறித்து காவலர்கள் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் கடந்த கல்வியாண்டில் 1,300 பள்ளிகளில் படிக்கும் 2.11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கு நல்ல வரவேற்பு எழுந்ததை தொடர்ந்து இந்த ஆண்டும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறும்படமும் திரையிட்டு காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ லட்சுமி, துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News