மேட்டுப்பாளையம் கோவில் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட 2 பேர் மீது தாக்குதல்
- ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த நபர்கள், பட்டா கத்தியால் ஆனந்தன், அந்தோணியை தாக்கினர்.
- ஆனந்தன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பாரத் பவன் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது37).அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (37). கூலித்தொழிலாளிகள்.
இவர்கள் 2 பேரும் திருவள்ளுவர் நகர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே சென்றனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தனர்.
இதனை பார்த்த ஆனந்தனும், அந்தோணியும், அவர்களிடம் சென்று கோவில் முன்பு இப்படி செய்யலாமா என கூறி தட்டி கேட்டனர்.
இதனால் 2 தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து, ஆனந்தன், அந்தோணியை தாக்கினர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆனந்தன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.
விசாரணையில் ஆனந்தன், அந்தோணியை தாக்கியது, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23), பிரதீப் (22), பிரசாத் (21) என்பதும், 3 பேரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த், பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.