மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டம்
- இன்று 2-வது நாளாக தொடர்கிறது
- நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீபாபர்வீன் தலைமை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும், அ.தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் எழுந்து, இந்த கூட்டத்தை யார் நடத்துவது. மாத கடைசியில் கூட்டம் நடத்துகிறீர்கள். ஆனால் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர்கள் வரவில்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார். எனவே கூட்டத்தை நடத்தக்கூடாது என்றார்.
இதேபோல் மற்றொரு அ.தி.மு.க கவுன்சிலர், தனது வார்டில் 2 மாதமாக குப்பைகள் அகற்றப்படவில்லை என தெரிவித்தார். இதற்கும் யார் பதில் அளிப்பார் என கேட்டு, கூட்டத்தை நடத்தக்கூடாது என்றனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துங்கள் என தெரிவித்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளவும் முற்பட்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது, தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் அங்கிருந்த நாற்காலியை தூக்கி அ.தி.மு.க கவுன்சிலர்களை நோக்கி வீசினார். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
இதையடுத்து நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள், நாற்காலியை தூக்கி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகரமன்ற கூட்ட மைய அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ விரைந்து வந்து, அ.தி.மு.க கவுன்சிலர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இரவில் அவர்களுடன் நகராட்சி ஆணையாளர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து கவுன்சிலர்கள் இரவு முழுவதும் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலக கூட்டரங்கிலேயே இரவில் ஓய்வெடுத்தனர். இன்று காலை 2-வது நாளாக அ.தி.மு.க கவுன்சி லர்களின் போராட்டம் நடந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.