கோவையில் கஞ்சா பதுக்கி விற்ற 7 பேர் கைது
- மதுக்கரை, போத்தனூர் பகுதிகளில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ைகதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் உள்ள திருமண மண்டபம் அருகே உள்ள தோட்டத்தில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கோவில்பாளையம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசாவை சேர்ந்த பிபின்ரானா (வயது 27), பிரதீப்குமார் (34), பிடேஷ் பாண்டே ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா தலைமையில் செட்டிப்பாளையம் - வடசித்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மொபட்டில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் மொபட்டில் கஞ்சாவை கடத்தி சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சேட்டு (37), செட்டிப்பா ளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
போத்தனூர் போலீசார் மதுக்கரை மார்க்கெட் ரோடு சத்தியமூர்த்தி நகர் வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன்குமார் (27), கண்ணன் (47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.