மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகளில் கட்டப்பட்டு இருந்த 4 பசு மாடுகள் திருட்டு
- தீவனம் போடுவதற்காக சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டு இருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.
- இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாக்குகார வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). இவர் சொந்தமாக 3 பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் 3 பசுமாடுகளையும் வீட்டு முன்பு கட்டி இருந்தார். தீவனம் போடுவதற்காக சென்று பார்த்த போது அங்கு கட்டப்பட்டு இருந்த 2 பசு மாடுகளை காணவில்லை.
இதில் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் பசு மாடுகளை கண்டு பிடிக்க முடியவில்லை. யாரோ மர்மநபர் 2 பசு மாடுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோல கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரபு (31). இவர் 2 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த இவரது 2 பசு மாடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து இவர்கள் 2 பேரும் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபரிகளின் 4 பசு மாடுகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.