கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது
- போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- பிரவீனிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருகூர் ஏஜி புதூர் ரோட்டை சேர்ந்த பிரவீன்(வயது22) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பெரிய கடைவீதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எல்ஜி தோட்டத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கெம்பட்டி காலனியை சேர்ந்த மனோஜ்குமார்(26), தர்மலிங்கம்(19) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோண வாய்க்கால்பாளையம் கக்கன் நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி சதாம் உசேன்(21) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.