உள்ளூர் செய்திகள்
மஞ்சள் பை

ஊட்டி ரோஜா கண்காட்சி தொடங்கியது: ரோஜா மலர்களால் உருவான மஞ்சள் பை, பியானோ

Published On 2022-05-14 12:02 IST   |   Update On 2022-05-14 12:06:00 IST
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்ர்வையிட்டனர்.

 


கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. 30 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு ட்ரீ அவுஸ் அமைக்கப்பட்டு பூங்காவில் காட்சி படுத்தப்பட்டிருந்தது.

மேலும் 20 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பியாேனா, மான், பனிக்கரடி, படச்சுருள் மற்றும் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் வடிவங்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தது.

வண்ண வண்ண ரோஜா மலர்களை கொண்டு குழந்தைகள் சறுக்கி விளையாடும் சறுக்கு, திண்டுக்கல் பூட்டு சாவி, கோபுரம், மலர்களால் ஆன மனிதன், விலங்குகள், குழந்தைகளுக்கு பிடித்த மோட்டு, பட்லு பொம்மைகளும் இடம் பெற்றிருந்தது.

30,000 ரோஜா மலா்களைக் கொண்டு பிரமாண்ட மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பிளாஸ்டிக்கை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோஜா கண்காட்சியில் பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மஞ்சப்பையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர், மஞ்சப்பை உபயோகிப்பீர் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

நிலா மாடம் அருகே மெரிகோல்டு மலா்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் ’செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துைற சார்பில் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர்களை கொண்டு சிறிய அளவிலான மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சியையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள், பூங்காவில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு அரங்கங்களும், ரங்கோலிகளும் பூங்காவில் போடப்பட்டிருந்தது. இது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுந்தது.

பின்னர் அவர்கள் பூங்காவுக்குள் சென்று, ரோஜாக்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த மான், பனிக்கரடி, படச்சுருள், ட்ரீ அவுஸ் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன், அவற்றின் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர். குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பொம்மைகளையும், சறுக்கையும் கண்டு குதுகலமடைந்தனர்.

மேலும் பூங்காவில் உள்ள 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண மலர்களில் பூத்து குலுங்கிய ரோஜாக்களையும் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக்குக்கு பதிலாக மஞ்சைப்பை பயன்படுத்துவதின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News