செய்திகள்
வாக்காளர் பட்டியல்

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Published On 2020-12-12 15:23 IST   |   Update On 2020-12-12 15:23:00 IST
கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடக்கிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 1.1.2021-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியின் கீழ், வருகிற 15.12.2020 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு விரும்பும் வாக்காளர்கள் படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ஏ-விலும், பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் ஆகியவைகளுக்கு படிவம் 8-ம், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வாக்காளர்களின் வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ-விலும் கோரிக்கை மனுக்களை சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கொடுத்துக்கொள்ளலாம். மேலும் வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று (சனிக்கிழமையும்), நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) சிறப்பு முகாம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் வாக்குச்சாவடியில் பணியில் இருக்கும் வாக்குச்சாவடி அமைவிட நியமன அலுவலரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய படிவத்தில் கோரிக்கை மனுக்களை வாக்காளர்கள் கொடுக்கலாம். மேலும் படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்கான படிவத்துடன் வயதிற்கான ஆதாரமாக பிறப்புச்சான்று அல்லது கல்லூரி, பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிடத்திற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிடத்தை குறிக்கும் முகவரி உள்ள ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் நகல் இவைகளின் ஏதேனும் ஒரு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளமான https://www.nvsp.in/ என்ற முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை 1950 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

Similar News