செய்திகள்

பதவியேற்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலினை அழைத்து இருக்க வேண்டும்- நாராயணசாமி

Published On 2019-05-31 10:34 GMT   |   Update On 2019-05-31 10:34 GMT
மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News