இந்தியா

இந்தியாவின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் சோமநாதர் கோவில்: பிரதமர் மோடி

Published On 2026-01-12 01:50 IST   |   Update On 2026-01-12 01:50:00 IST
  • கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள்.
  • 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது என்றார்.

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார்.

இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:

சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர்.

கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.

வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.

வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோமநாத் கோவில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோவிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றபோது அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடம் உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News