3வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை சமன்செய்தது இலங்கை
- முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 160 ரன்கள் குவித்தது.
- கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார்.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார். குசால் மெண்டிஸ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுனியர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் சல்மான் ஆகா 12 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் முடிந்தது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹசரங்கா வென்றார்.