செய்திகள்

மீத்தேன் பகுதியில் புதிய தடுப்பணை- அமைச்சரின் பேச்சால் சலசலப்பு

Published On 2019-02-25 04:39 GMT   |   Update On 2019-02-25 04:54 GMT
கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
Tags:    

Similar News