செய்திகள்

திருவாரூர் தேர்தல் ரத்தானதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது- முத்தரசன்

Published On 2019-01-07 07:23 GMT   |   Update On 2019-01-07 07:23 GMT
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்தானதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #Mutharasan #ADMK #BJP
கும்பகோணம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது தமிழகத்தில் பருவமழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தமிழக அரசு நிறுத்தி விட்டது.

திருவாரூர் மாவட்ட மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதேபோல் ஏராளமான பேர் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை இல்லாமல் உள்ளனர். இதனால் திருவாரூர் தேர்தலை ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா எம்.பி. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தேர்தல் கமி‌ஷன் உத்தரவுப்படி திருவாரூர் கலெக்டர் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடைபெறுவது குறித்து கருத்துகள் கேட்டார்.


இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்து பேசினர். அதற்கு பிறகு தமிழிசை , திருவாரூர் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பா.ஜனதாவின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

திருவாரூர் தேர்தல் ஒருவேளை நடைபெற்று இருந்தால் தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கும். இதற்கு பயந்து தான் பா.ஜனதா துணையுடன் தேர்தலை நிறுத்தி விட்டனர். திருவாரூர் தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. வெற்றி பெற்றதே கிடையாது.

கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் விரைவில் வழங்குவதாக கூறுகிறார்கள்.

8,9-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் போராட்டம் நடத்தினால் அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு வராவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #ThiruvarurByElection #Mutharasan #ADMK #BJP
Tags:    

Similar News